ஒரு நாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மக்கள் நீதிமய்யம் கட்சி அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்துவாங்குகின்றது. 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்படும் நிலையில் ஒரு நாள் மழைக்கே இங்கு சென்னை தத்தளிக்கின்றது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ போர்க்கால அடிப்படையில் கூடுதல் ஏற்பாடுகளை செய்யவேண்டும். சென்னையில் பல நூறு கோடி மதிப்பில் வடிகால் பணிகள் ஏற்கனவே தொடங்கபபட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு அளவுக்கு தற்போது மழையின் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கின்றது.
அதே நேரத்தில், ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கின்றது. சென்னையில் பல நெடுஞ்சாலைகளில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்தனர். இதே போல, நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் வேதனைக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பெருதும் சிரப்படுகின்றனர். சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது எனவே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து ஒரு பெண், வியாசர்பாடியில்மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுனரும் பலியாகி உள்ளனர். இனி ஒரு உயிரைக் கூட பறி கொடுக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.
நகரின் பல்வேறு பகுதிகளில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில், தண்ணீரை வெளியேற்றவதில் ஊழியர்கள் மழையை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது பாராட்டவேண்டியது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கை வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.