திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது.
திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார்.
ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் அந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த கடையை ரங்கராஜ், மற்றொரு வெங்காய வியாபாரி ராஜாவுக்கு உள்வாடகை விட்டு பணம் சம்பாதித்து வந்தார். இதற்காக அவர் ரூ.1 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து ரங்கராஜின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
இதனிடையே ரங்கராஜ் கடையை காலி செய்யுமாறு ராஜாவிடம் தெரிவித்தார். ஒப்பந்தப்படி ரூ.1 லட்சம் மட்டுமே தருவதாக ராஜாவிடம் தெரிவித்தார். இதனால் தகராறு மூண்டது. வாக்குவாதம் கைகலப்பாகியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கராஜ் கத்தியை எடுத்து ராஜாவை குத்தியதாக கூறப்படுகின்றது. மேலும் ஆத்திரம் தீராமல் ரங்கராஜ் ஒரு கையில் லைட்டரை பற்ற வைத்து, மற்றொரு கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்து ராஜா மீது ஊற்ற விரட்டினார். ஒரு கட்டத்தில் பெட்ரோலை அவர் மீது ஊற்றிவிட்டார்.
அதே நேரத்தில் ரங்கராஜ் உடல் மீதும் பெட்ரோல் கைதவறி ஊற்றிக் கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக கையில் வைத்திருந்த லைட்டர் ரங்கராஜை எரித்தது. மளமளவென தீ பரவி எரிந்தது. அலறியபடி ரங்கராஜ் ஓடினார். பலத்த காயம் அடைந்த அவர் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கத்திக்குத்து பெற்ற ராஜாவையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.