சிறுமியை காதலித்து கடத்தியதாக போக்சோவில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த வாலிபரை அடித்துக் கொன்று உடலை வாய்க்காலில் வீசிய சிறுமியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி பூபதி (25). இவர் கடந்த ஆண்டு பெருந்துறையை சேர்ந்த சிறுமியை காதலித்து கடத்தியதாக போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கடந்த 4ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ் பவானி கிளை வாய்க்காலில் பூபதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால், பூபதி அடித்துக் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றி, விசாரணையை தீவிரப்படுத்தினர். இதை அறிந்த அவரது உறவினர்கள் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், ”சிறுமியின் குடும்பத்தினரோ அல்லது அவரது அண்ணனோதான் பூபதியை அடித்துக் கொலை செய்து வாய்க்காலில் வீசியிருக்க வேண்டும்” என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீசார், சிறுமியின் உறவினர்களான விக்னேஷ் (25), பரமசிவம் (47) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பூபதியை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில் விக்னேஷின் தந்தை ஆறுமுகத்துக்கும் (50) தொடர்பு இருப்பதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.