படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் முதுகலை பட்டதாரி இளைஞர், பேருந்து நிலைய கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கீழ உத்தரங்குடி பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சுரேஷ்குமார் (35) இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியாற்றி வந்தார். இந்நிலையில், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்து வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் சுரேஷ்குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடவாசல் காவல் நிலைய போலீசார், சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.