அண்ணாநகரில் வரி பாக்கி வைத்திருந்த மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் முறையாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி அந்த கட்டிடங்களில் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவிப்பு பேனர் வைத்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள பிரபல மருத்துவமனை, கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் வரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு வரி பாக்கியை செலுத்தும்படி மண்டல அதிகாரிகள் சார்பில் முறைப்படி பலமுறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், அதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அண்ணா நகர் மண்டல வருவாய் அலுவலர்கள் தலைமையில் வந்த மாநகராட்சி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை கட்டிடத்துக்கு வரி பாக்கி தொகை எவ்வளவு உள்ளது? என்பதை குறிப்பிட்டு எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.