தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இணையும் சூழல் உருவாகிறதா என்ற விவாதம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவல்களுக்கு இதுவரை திமுக தரப்பிலிருந்தோ அல்லது பாஜக தரப்பிலிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் வெளியாகவில்லை.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சரத் பவார், திமுக மற்றும் பாஜக இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. திமுக மத்திய அரசுடன் இணையும் பட்சத்தில், அக்கட்சிக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான கனிமொழி கருணாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், இந்த சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணிக்கும் இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றதும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக-பாஜக இடையே புதிய அரசியல் நகர்வு ஏற்படுகிறதா என்ற விவாதம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேபோல், சரத் பவார் அணியும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையப்போவதாக உறுதி செய்யவில்லை. எனவே, தொகுதி மறுவரையறை, தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு கூடுதல் ஆதரவை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற அரசியல் பேச்சுகள் எழுந்திருக்கலாம் என்ற நிலையில், தற்போதைக்கு இவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத அரசியல் யூகங்களாகவே பார்க்கப்படுகின்றன.
Also Read: விஜய் அரசியலில் வெற்றி… அடுத்து யாஷா? அரசியல் என்ட்ரி குறித்து ‘கேஜிஎஃப்’ ஹீரோ சொன்ன பதில்..



