திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பம் உள்ளவர்களை திமுக உறுப்பினர்களாக்கும் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்தது. எனவே, இம்முன்னெடுப்பை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம், திமுக முப்பெரும் விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை ஆகிய பொருள்களில் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.