கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக கடந்த 30-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் குறித்து புகாரளித்தும் திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது.
அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!



