இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.இந்திய ரயில்வெ உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக திகழ்கிறது. இத்தகைய பெரிய அமைப்பில், பயணிகள் எளிதாக தங்கள் பெட்டிகளை அடையாளம் காண உதவ பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றாக ரயில் பெட்டிகளின் வெளியே வரையப்பட்டிருக்கும் நிறக் கோடுகள் அமைந்துள்ளன.
பெரிய ரயில் நிலையங்களில் ரயில் வந்து நின்றவுடன், நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் பெட்டிகளை தேடி ஓடுவது வழக்கம். எந்த பெட்டி பொதுப் பெட்டி, எது பெண்களுக்கானது, மாற்றுத்திறனாளிகளுக்கானது எது என்பதில் குழப்பம் ஏற்படும். இதை எளிதாக்கவே இந்திய ரயில்வே ஒவ்வொரு வகை பெட்டிக்கும் தனித்தனி நிறக் குறியீடுகளை வழங்கியுள்ளது.
வெள்ளைக் கோடு: பொதுவாக நீல நிறத்தில் இருக்கும் விரைவு ரயில் பெட்டிகளில் ஜன்னலுக்கு மேல் அல்லது பக்கவாட்டில் வெள்ளைக் கோடு இருந்தால், அது முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டி என்பதை குறிக்கிறது. எழுத்தறிவு இல்லாத பயணிகளுக்கும் இதை பார்த்தே எளிதாக அடையாளம் காண முடியும் என்பதே இதன் முக்கிய பயன்.
மஞ்சள் கோடு: ரயில் பெட்டியின் கடைசி ஜன்னல்களுக்கு அருகில் மஞ்சள் நிறக் கோடு இருந்தால், அது மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கான பெட்டி என்பதை குறிக்கிறது. இந்த பெட்டிகள் பொதுவாக எஞ்சின் அருகில் இருக்கும். அவசரநிலைகளில் மருத்துவ உதவி பெறவும், ரயில்வே ஊழியர்கள் விரைவாக அணுகவும் இது உதவுகிறது.
பச்சை / சாம்பல் கோடுகள்: பெட்டிகளில் பச்சை அல்லது சாம்பல் நிறக் கோடுகள் இருந்தால், அது பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட சிறப்பு பெட்டி. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இயங்கும் புறநகர் ரயில்களில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சிவப்பு கோடுகள்: புறநகர் ரயில் பெட்டிகளில் சிவப்பு நிறக் கோடுகள் இருந்தால், அது முதல் வகுப்பு பெட்டி என்பதை குறிக்கும். இந்த பெட்டிகளில் கூடுதல் வசதிகளும், அதிக கட்டணமும் இருக்கும்.



