புருவத்தின் வடிவை மெருகூட்டி மேலும் அழகாக்க, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப்படுகிறது. புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். மிகவும் எளிமையான மற்றும் சில நிமிடங்களில் முடியும் இந்த அழகு சிகிச்சை, முக அழகை மேம்படுத்தி, பொலிவாக்கும். இதனால் இன்றைய தலைமுறையில் பல பெண்கள் த்ரெண்டிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆனால் பார்லரில் இதைச் செய்வதில் தூய்மை, சுகாதாரம் கடைப்பிடிக்க படாவிட்டால் ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூக வலைதளத்தில் வீடியோவொன்றில் டாக்டர் அடிடிஸ் டாமிஜா கூறியதாவது: 28 வயது பெண் ஒருவர் பார்லரில் புருவங்களை த்ரெட் செய்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, த்ரெட்டிங் தானாகவே தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் பழைய நூல், ஒருவருக்குப் பயன்படுத்திய நூலை மற்றொருவருக்குப் பயன்படுத்துவது, அல்லது அழகுக்கலை நிபுணரின் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது போன்ற தவறுகள் நடந்தால், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸ் தொற்றுகள் பரவக்கூடும். த்ரெட்டிங் செய்யும்போது முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டால், அந்த வழியாக வைரஸ் இரத்தத்தில் நுழைந்து கல்லீரலை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
த்ரெட்டிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
* ஒருமுறை பயன்படுத்தும் நூல் மட்டும் பயன்படுத்தவும்.
* த்ரெட்டிங் செய்வதற்கு முன்பும் பின்னும் தோலை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
* அழகுக்கலை நிபுணர்கள் கைகளை கழுவி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
* காயம், தீக்காயம், முகப்பரு இருந்தால் த்ரெட்டிங் செய்யக்கூடாது.
* மலிவான பார்லர்களிலோ, பயிற்சி பெறாதவர்களிடமோ த்ரெட்டிங் செய்வதைத் தவிர்க்கவும்.
* அழகுக்காக செய்யப்படும் இந்தச் செயலில் கவனக்குறைவு இருந்தால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more: 15 பேர் பலி.. சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..!!