ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 65 வயது நபர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில், கமலா என்ற நர்ஸ் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அந்த மருத்துவரிடம் “உன்னை பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பேன் என்றும், உனது அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன்” என்று மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மருத்துவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கமலாவின் செயலால் விரக்தி அடைந்த மருத்துவர், நடந்த சம்பவங்கள் குறித்து பார்மர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் நர்ஸ் கமலாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து நர்ஸ் கமலா நீதிமன்றத்துக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “டாக்டர் ஒரு கற்பழிப்பு குற்றவாளி. அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பல பெண் நோயாளிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” என்று கூறினார். மேலும், அவரிடம் பெண்களை அழைத்து செல்லவதற்கு என்று மருத்துவமனையில் 2 ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், டாக்டர் அதிக பணம் கொடுத்து அந்த பிரச்சினையை முடித்து விடுவார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர் கூறும்போது, ” கடந்த 2016 டிசம்பர் முதல் எனது மருத்துவமனையில் பணிபுரிந்த கமலா, பெரும்பாலும் இரவு நேர பணியில் இருந்தார். டீ போடுவதாக கூறி 4-ஆவது மாடியில் இருக்கும் எனது அறைக்கு வரும் அவர், எனக்கு தெரியாமல் எனது செல்போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து அதை வெளியிடுவதாக மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்தார்” என்றார்.



