தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் அருகேயுள்ள குண்டப்பட்டி முனியப்பன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கும் வாழ்க்கை மாற்றங்களுக்கும் சாட்சியாக இன்று தனித்துவமான ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
காவிரி ஆற்றின் ஓசையும், அடர்ந்த வனத்தின் அமைதியும் ஒன்றாக கலந்த சூழலில், நூற்றாண்டுகள் பழமையான முனியப்பன் கோயில் பெரிய மரத்தின் அடியில் அமைந்துள்ளது. தமிழகத்தையும் கர்நாடகா மாநிலத்தையும் இணைக்கும் ஆன்மீக பாலமாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தொலைதூர பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர். சிலர் வனப்பாதை வழியாகவும், சிலர் காவிரி ஆற்றை கடந்து பரிசலில் வந்தும் முனியப்பனை வழிபடுகின்றனர். மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுடன், கர்நாடகாவின் மாதேஷ்வரன்மலை பகுதியிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலின் மிகப்பெரிய சிறப்பு, பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் சிலைகள்தான். போலீஸ் வேலை கிடைத்தால் போலீஸ் சிலை, வாகனம் வாங்கினால் வாகனச் சிலை என, தங்கள் வாழ்க்கையில் நடந்த முன்னேற்றங்களை நினைவுகூரும் வகையில் கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் தற்போது 1200-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலின் முக்கிய மரபுகளில் ஒன்று ‘பூ வாக்கு’ கேட்பது. வேலை, தொழில், திருமணம், வீடு, குழந்தை பாக்கியம் போன்ற வாழ்க்கை முடிவுகளுக்காக, பக்தர்கள் பூசாரியிடம் வாக்கு கேட்டு வழிகாட்டல் பெறுகின்றனர். ஒருகாலத்தில் வனப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய வீரப்பன் கூட வனத்திற்குள் செல்லும் முன் இக்கோயிலில் வழிபட்டு பூ வாக்கு கேட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
அதிகாலையில் பல்லியின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பலன் பார்ப்பதும் இங்கு வழக்கமாக உள்ளது. பல்லி எந்த திசையில் சத்தம் போடுகிறது என்பதைக் கொண்டு, தங்கள் செயல்களை தொடங்கும் நம்பிக்கை இன்னும் நிலவுகிறது. சக்தி மற்றும் ஆக்ரோஷம் நிறைந்த தெய்வமாக முனியப்பன் போற்றப்படுவதால், அவரை விரல் நீட்டி சுட்டிக்காட்டக் கூடாது என்ற நம்பிக்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், முனியப்பன் காலடியில் வைத்து வேண்டினால் குணமாகும் என்ற நம்பிக்கையோடு பலர் இங்கு தரிசனம் செய்கின்றனர்.



