தோற்றமும் மறைவும் இயற்கை விதியாக இருந்தாலும், பிரபஞ்சத்தில் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பது நாம் செய்யும் தர்மம் மட்டுமே. ஒரு மனிதனின் வாழ்க்கை நெறிமுறை தர்மத்தின் வழியில்தான் கட்டமைக்கப்பட வேண்டும். சக மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதியும், அதனால் வடியும் கண்ணீர்த் துளிகளும் ஒருபோதும் சும்மா போவதில்லை; அது காரணமானவர்களைக் காலம் கடந்து பெரும் வினையாகத் தாக்கும் என்பது உலக நியதி. உச்சகட்ட வேதனையின் விளிம்பில் நின்று ஒருவர் வெளிப்படுத்தும் மனக்குமுறலே சாபமாக மாறி வாழ்க்கையை உலுக்கிவிடுகிறது. குறிப்பாக, மனித வாழ்வில் தவறியும் கூட சிலருடைய சாபத்தையோ, கண்ணீரையோ சம்பாதித்துவிட கூடாது என ஆன்மிக சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.
முதலாவதாக, இந்த உலகைக் காட்டிய பெற்ற தாய், தந்தையரின் கண்ணீரும் சாபமும் ஒரு மனிதனின் குலத்தையே ஆட்டிப்படைத்துவிடும் ஆற்றல் கொண்டவை. அவர்களைத் தொடர்ந்து, தீராத நோயினால் படுக்கையில் அவதிப்படுபவர்களின் மனதை நோகடித்துப் பெறும் சாபம், தலைமுறைக்கும் தீராத கர்ம வினையைத் தரும். இதேபோல் நல்வழி காட்டும் ஆன்மிக குருமார்கள், பற்றற்ற சாதுக்கள் மற்றும் எளிய முதியோர்கள் தள்ளாத வயதில் இயலாமல் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்திப் பெறும் மனக்குமுறல், வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையையே முற்றிலுமாக அடைத்துவிடும்.
மேலும், பெரும் துயரத்திலும் வறுமையிலும் சிக்கித் தவிப்பவர்களை மேலும் இழிவுபடுத்தியோ அல்லது ஏமாற்றியோ சாபத்திற்கு ஆளாகக் கூடாது. இத்தகைய கொடிய சாபங்களைச் சுமப்பவர்கள் எவ்வளவுதான் செல்வமும் பதவியும் பெற்றாலும், வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியையோ நிம்மதியையோ அடைய முடியாது. இந்த ஒரு பிறவியில் மட்டுமின்றி, மறுபிறவிகளிலும் தொடர்ந்து வந்து நிம்மதியைக் குலைக்கும் வல்லமை இச்சாபங்களுக்கு உண்டு என்பதால், எளியோரிடமும் பெரியோரிடமும் தர்மத்துடனும் கருணையுடனும் நடந்துகொள்வதே மனித வாழ்வின் தலையாய கடமையாகும்.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



