அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்..
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாடியது.. ஓபிஎஸ் தரப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அவசர வழக்காக விசாரித்திருந்தார்.. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டது..
இதை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி நடந்த விசாரணையில் அனைத்து தரப்பினரும் சுமார் 7 மணி நேரம் வாதங்களை முன்வைத்தனர்.. அப்போது, நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என்று ஓபிஎஸ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.. ஆனால், இபிஎஸ் தரப்போ, வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்க வழக்கு தொடரப்பட்டது என்று வாதிட்டது.. அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்..
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை எதிர்க்கும் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.. மேலும் ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராவது தடையில்லை என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளார்..
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அதிமுக பொதுச்செயாலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.. அவருக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. மேலும் ஒருமனதாக தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு, தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.. எடப்பாடி பொதுச்செயாளரானதை பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்..
இதனிடையே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தனி நீதிபதி குமரேஷ்பாபு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறை செய்துள்ளார்.. இந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக், நாளை அவசர வழக்காக விசாரிக்கின்றனர்..