தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற இன்று தருமபுரி வட்டம், குண்டல்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
மேற்படி கல்விக்கடன் முகாமில் எற்கனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான அனுமதி சீட்டு வழங்கவும், மற்றும் புதியதாக விண்ணப்பிக்க உள்ள மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களில் பயிலும் சான்று (Bonafide Certificate) பள்ளிக்கல்வி இறுதி வகுப்பு சான்றிதழ்கள், ஆதார், அட்டை, பான் அட்டை (PAN Card) மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் வரவேண்டும். முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முகாமில் கல்வி கடனுக்கான முக்கிய ஆவணங்களான வருமான சான்றிதழ், மற்றும் இருப்பிட சான்றிதழ் விரைவாக பெற வருவாய்த்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி கடன் மேளா முகாமில் மாணவர்கள் பங்கு பெற்று பயன்பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .