துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம். தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் பொறிமுறை, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் நிறைய கடின உழைப்பைச் செய்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.
வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது. கடைசியாக இதுபோன்ற திருத்தம் 2015-ல் செய்யப்பட்டது. மேலும், முதல் முறையாக தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு கௌரவ ஊதியம் வழங்கப்படவுள்ளது. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியமான ரூ 6,000, ரூ 12,000 ஆக உயர்த்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான ஊக்கத்தொகை ரூ 1000-லிருந்து, ரூ2000 ஆக உயர்த்தப்படுகிறது.
மேலும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12,000-லிருந்து ரூ 18,000 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் பதிவு மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு முறையே ரூ30,000 மற்றும் ரூ 25,000 என மதிப்பூதியம் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இது தவிர, பீகாரில் இருந்து தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ரூ. 6,000 சிறப்பு ஊக்கத்தொகையையும் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
துல்லியமான வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கவும், வாக்காளர்களுக்கு உதவவும், தேர்தல் செயல்முறையை வலுப்படுத்தவும் கள அளவில் அயராது உழைக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவதற்கான தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டை இந்த முடிவு பிரதிபலிக்கிறது.