கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிய அவர், அதற்கான காலக்கெடுவையும் விதித்தார். “பத்து நாட்களுக்குள் பிரிந்து சென்றவர்களை சேர்க்கவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, “கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவோம்” என்கிறார். ஆனால் 2009-ல் ஜெயலலிதா அவரையே அதிமுகவிலிருந்து நீக்கியதை செங்கோட்டையன் சுட்டிக்காட்டி, கூர்மையான விமர்சனத்தை முன்வைத்தார். 2016க்கு பின் தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளோம் எனவும், பாஜக உடன் கூட்டணியில் இருந்திருந்தால் 2024 தேர்தலில் குறைந்தது 30 இடங்களை வென்றிருப்போம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார். “கழகம் தொய்வோடு உள்ளது. அதை மீண்டும் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், மறப்போம் – மன்னிப்போம் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடியிடம் சொன்னேன். ஆனால் அவர் ஏற்கவில்லை” என சாடிய செங்கோட்டையன், 6 அமைச்சர்கள் கூட இதற்காக பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தும், அவர் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பணியாற்றி வருவதாகவும், எம்ஜிஆர் தன்னிடம் காட்டிய அன்பு, நம்பிக்கை குறித்து நினைவுகூர்ந்தார். “எம்ஜிஆர் பெயரை சொன்னாலே தேர்தலில் வெற்றி பெறலாம். அதே போல ஜெயலலிதாவும் ஆளுமை மிக்க தலைவராக கட்சியை நடத்தினார். ஆனால் இப்போது கட்சியில் அதே நிலைமை இல்லை” என அவர் கூறினார்.
Read more: LinkedIn-க்கு டஃப் கொடுக்கும் OpenAI..! புதிய வேலைவாய்ப்பு தளம் அறிமுகம்!