வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஈரானுடனான அனைத்து வர்த்தக, வணிக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
வளைகுடா கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமீரகம் குற்றம்சாட்டியுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்த இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று அமீரக எல்லைக்குட்பட்ட கடற்பகுதியிலும், மற்றொன்று எல்லைக்கு வெளியேயும் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழல் காரணமாக ஈரானுடனான வணிகப் பரிவர்த்தனைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக நிறுத்தப்படுவதாக அமீரக வெளியுறவு அமைச்சகத் தொடர்பாளர் அஃப்ரா அல் ஹமேலி அறிவித்துள்ளார்.
அமீரகத்தின் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் அடிப்படையற்றவை என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார். இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையைக் குலைக்கும் என்றும், பாதுகாப்பு முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது. அமீரகத்தைச் சேர்ந்த அட்னாக் (ADNOC) நிறுவனத்தின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மக்களுக்கு ஏவுகணை அச்சுறுத்தல் குறித்த அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையும் தொலைபேசி வழியே அனுப்பப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அமெரிக்கா-ஈரான் மோதலின் விரிவாக்கமாகவே இந்த பிராந்தியப் பதற்றங்கள் பார்க்கப்படுகின்றன.



