சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழக முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களே நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் நான்காவது கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தன்னுடைய ஐந்தாவது கட்ட சுற்று பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.
அப்போது நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் பிரசார கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி உரையாற்றினார். அவர் கூறியதாவது: “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களுக்கும் தனிப்பட்ட வாரிசு எவரும் இல்லை. அவர்களின் உண்மையான வாரிசு நீங்கள் மக்கள்தான். அந்த தலைவர்கள் போல் நாமும் மக்களுக்காகவே உழைக்கிறோம்,” என்றார்.
“அதிமுகவை உடைக்க எத்தனையோ பேர் முயன்றும், முடக்க முயன்றும் பார்த்துள்ளனர். ஆனால் தொண்டர்களின் அர்ப்பணிப்பால் அனைத்தும் தவிடுபொடியாகி வருகிறது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது. தொண்டர் ஒருவர் எம்.எல்.ஏ., எம்.பி. மட்டுமல்லாமல் முதலவராகவும், பொதுச் செயலாளராகவும் உயர இயலும் ஒரே கட்சி அதிமுக,” என்று பெருமிதத்துடன் பேசினார்.
திமுக அரசை கடுமையாக சாடிய அவர், “தமிழகத்தில் இப்போது கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாட்களே இல்லை. மாணவர்கள் கூட கஞ்சாவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. இந்த ஆட்சியை மக்கள் வரும் தேர்தலில் அகற்றுவார்கள்,” எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை “அதிகாரத்தின் உச்சம்” என ஓ. பன்னீர் செல்வம் விமர்சிக்க, சசிகலா “சிறுபிள்ளைத்தனம்” என கருத்து தெரிவித்தார். டிடிவி தினகரனும் எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய சூழலில், “அதிமுக ஒன்றுபட்ட கட்சி, உடைக்க முடியாத கட்சி” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.