தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மேலும் 17 லட்சம் தகுதியான பெண்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்துத் தேர்வு செய்யப்பட்ட தகுதியுள்ள புதிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “ குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே! எப்போது கொடுத்தீர்கள்.? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்து விட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்து விட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள். இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை?
தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான், மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல.
உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை.” என்று தெரிவித்துள்ளது..



