இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனை என்ற நிலை மாறி, சிறு குழந்தைகளையும் பாதிக்கும் ஒரு தீவிர ஆரோக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை காரணமாகப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் வெளிப்புற அறிகுறிகள் எதையும் உடனடியாகக் காட்டாது என்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதைக் கண்டறிவது அவசியமாகிறது.
குழந்தைகளின் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முதன்மைப் படியாக அவர்களின் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், சோடா, பாக்கெட் ஜூஸ் போன்ற அதிக இனிப்பு நிறைந்த பானங்கள் மற்றும் கேக், பேக்கரி உணவுகளில் நிறைந்துள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் ரத்தக் கொழுப்பை வேக உயர்த்துகின்றன.
இவற்றைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக, நமது பாரம்பரிய உணவான ‘கொள்ளு’ கொழுப்பைக் கரைக்கும் சிறப்பான ஆற்றல் கொண்டது என்பதால், அதைச் சூப்பாகவோ அல்லது சுண்டலாகவோ குழந்தைகளுக்கு அவ்வப்போது உணவில் சேர்த்து வரலாம்.
உணவுக் கட்டுப்பாடுடன் கூடவே, உடற்பயிற்சியும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் ஓடிப்பிடித்து விளையாடுவது, மிதிவண்டி ஓட்டுவது அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிப்பதோடு, அவர்களின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் எடையை (BMI) பராமரிக்கவும் உதவும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பழக்கப்படுத்துவதே கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காக்கும் சிறந்த அரணாகும்.
Read More : ஃப்ரிட்ஜ் மேலே இதை மட்டும் வைக்காதீங்க… ஆபத்து உங்களுக்குத்தான்!



