குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) அனைத்து தனியார் பள்ளிகளும் தொடக்க வகுப்புகளில் குறைந்தது 25% இடங்களை பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (EWS) மற்றும் பிற பின்தங்கிய குழுக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கிறது.
ஆனால், 2014-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சிறுபான்மை பள்ளிகள் இந்த விதியிலிருந்து விலக்கு பெற்றன. இந்த விலக்கின் சரியான தன்மையை உச்சநீதிமன்றமே திங்களன்று சந்தேகத்திற்குட்படுத்தியது. முதன்மை நீதிபதி டி.வை. சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அந்தத் தீர்ப்பு “உலகளாவிய தொடக்கக் கல்வியின் அடித்தளத்தையே ஆபத்தில் ஆழ்த்தியிருக்கலாம்” என்று எச்சரித்தது.
அடிப்படை உள்கட்டமைப்பு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், புத்தகங்கள், சீருடைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு குழந்தைகள் உரிமையுடையவர்கள் என்று RTE சட்டம் கூறுகிறது. ஆனால், சிறுபான்மை பள்ளிகள் விலக்கப்பட்டதால் இந்த வசதிகள் பல மாணவர்களுக்கு சென்றடையவில்லை எனவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் ஒரு பெரிய அமர்வின் பரிசீலனைக்காக நான்கு கேள்விகளை வடிவமைத்தனர். பெரிய அமர்வில் பரிசீலிக்க வேண்டிய கேள்விகள் பினவருமாறு..
* 2014-ல் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலக்கு தீர்ப்பு மறுபரிசீலிக்கப்பட வேண்டுமா?
* RTE சட்டம், அரசியலமைப்பின் பிரிவு 30 (சிறுபான்மையினரின் கல்வி உரிமை) மீறுகிறதா?
* சிறுபான்மை சமூகங்களில் உள்ள EWS மற்றும் பின்தங்கிய பிரிவினர் குழந்தைகளும் RTE நன்மைகளைப் பெற வேண்டுமா?
* RTE விலக்கு, அரசியலமைப்பின் சமத்துவ விதிகளுக்கு முரணா?
சிறுபான்மை பள்ளிகள், இந்த விலக்கை தவறாகப் பயன்படுத்துகின்றன என்ற ஆய்வு அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நடைமுறையில் உள்ள சேர்த்தல் மற்றும் விலக்கு விதிகள் தொடரும். ஆனால், விரைவில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வில் முடிவெடுக்கப்பட உள்ளது.



