தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை.. டெல்லி அணி Vs தமிழ்நாடு அணி.. டெல்லி அணி வெற்றி பெறுகிறதா அல்லது தமிழ்நாடு அணியா ஜெயிக்கிறதா என்பதை முடிவு செய்யும் தேர்தல்.. மத்தியில் இருக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை.. நாம் கேட்கும் நிதியையும் கொடுப்பதில்லை.. நம்ம தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என்பதை நிரூபிக்கும் தேர்தல்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழும் போட்டோவை காட்டி உதயநிதி பேசினார்.. அப்போது “ இந்த போட்டோவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நீங்கள் கேட்டதால் தான் இந்த போட்டோவை காண்பித்தேன்.. இந்த போட்டோவில் கீழே படுத்திருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி.. எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து தான் முதல்வர் பதவியை பெற்றார் என்று நான் கூறினேன்.. அவர் மக்களை சந்தித்து முதல்வராகவில்லை, காலில் விழுந்து தான் முதல்வரானார் என்று கூறினேன்.. ஆனால் பதவி கொடுத்தவர் காலில் விழுவதில் என்ன தவறு, காலில் விழுவது தானே நமது பண்பாடு என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்தது தவறு கிடையாது.. அவரின் காலை வாரிவிட்டது தான் தவறு என்று சொல்கிறோம்..
ஜெயலலிதா அம்மா இருந்தவரை அவரின் கால், அவருக்கு பின் சசிகலா அம்மாவின் கால், சசிகலா அம்மா ஜெயிலுக்கு போன உடன் டிடிவி தினகரன் கால், இப்போது எல்லா கால்களையும் விட்டு விட்டு டெல்லிக்கு சென்று மோடி காலை தான் பிடித்து தொங்குவேன் என்று தொங்கிக் கொண்டு இருக்கிறார்..
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்றைக்கும் இடம் கிடையாது.. அதனால் அதிமுக என்ற போர்வையை போட்டுக் கொண்டு பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கின்றனர்.. இந்தியாவின் பல மாநிலங்களை பாஜக கைப்பற்றி விட்டனர்.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை நுழைய விட மாட்டோம்..” என்று தெரிவித்தார்.



