தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 78 சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 40 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.25 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஊர்திகளைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2008&ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.
சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு..? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு..? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.