அனைத்து விவசாயிகளும் டிசம்பர் 1 வரை பயிர்க்காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2025-26ஆம் ஆண்டில், பிரதமந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து மத்திய அரசால் விலக்களிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை மத்திய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
2025 நவம்பர் 25 ஆம் தேதி முதல் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்று ஒன்றிய அரசால் மீண்டும் அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் அடையாள எண் பெற்ற நில உரிமைதாரர்கள் தவிர, குத்தகைதாரர்கள், கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
2025 நவம்பர் 30ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையலாம்.மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.



