தமிழ்நாட்டில் உழவர் நலன் சார்ந்த அரசு மானியங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் உண்மையான விவசாயிகளை மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்யவும், தகுதியற்ற போலிப் பயனாளிகளைக் கண்டறிந்து களையெடுக்கவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்க ஆதார் சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் உர மானியங்கள், குறுவை சாகுபடி தொகுப்பு, மழைக்கால நிவாரணம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கும் ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பலனடையவும் ஆதார் சமர்ப்பிப்பு அவசியமாகிறது. கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தள்ளுபடியும், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரையிலும் அரசு தள்ளுபடி வழங்கியுள்ள நிலையில், இச்சலுகையைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.
இதுவரை ஆதார் அட்டை பெறாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் துறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய அட்டைக்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகள் தற்காலிகமாக தங்களின் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை வழங்கிப் பயனடையலாம் எனவும், அட்டை கைக்கு வந்தவுடன் அதனை உடனடியாக வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென குறிப்பிட்ட இறுதிக் கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் பருவமழை காலப் பயிர்க் காப்பீடு மற்றும் சலுகைகளை தடையின்றி பெற விவசாயிகள் விரைந்து ஆதாரை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read More : தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்ததா தவெக அரசு..? அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!!



