விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாண்டி செல்வம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வனிதா (24). இந்த தம்பதியினருக்கு பார்கவி என்ற இரண்டரை வயது குழந்தை இருந்தது.
சமீபக் காலமாக கணவன் – மனைவி இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வனிதா கணவரிடம் இருந்து பிரிந்து, கப்பலூர் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தை பார்கவி அந்த நேரத்தில் தாயுடன் இருந்தபோதும், பாண்டி செல்வம் வேலைக்குச் செல்லும் முன், குழந்தையைப் பார்த்துச் செல்லும் வழக்கம் இருந்ததாக தெரிகிறது.
மூன்று நாட்களுக்கு முன், பாண்டி செல்வம் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, வேலைக்குச் சென்ற பாண்டி செல்வம், மனைவியுடன் செல்போன் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், பயந்துபோன குழந்தை பார்கவி அழுததாக கூறப்படுகிறது.
அப்போது, ஆத்திரத்தில் இருந்த பாண்டி செல்வம், தனது மகளை அடித்து அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்ததை கண்டு பதற்றமடைந்த பாண்டி செல்வம், உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு, வேலை செய்யும் ஆலையில் உள்ள ஒரு எந்திரத்தின் கீழ் மறைத்து வைத்துள்ளார்.
இதையடுத்து, தனது குழந்தை பார்கவியை காணவில்லை என திருமங்கலம் காவல் நிலையத்தில் பாண்டி செல்வம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். ஆனால், நேற்று அந்த ஆலையில் பணியாற்றிய ஒருவர் எந்திரத்தை இயக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தபோது, ஒரு ரசாயன மூட்டைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடலை கண்டுபிடித்து மீட்டனர். விசாரணையின் போது பாண்டி செல்வம் தான் செய்த செயலை ஒப்புக்கொண்டார். குடும்பத் தகராறில் ஏற்பட்ட மனஅழுத்தமும், கோபமும் தான் இச்செயலை மேற்கொள்ளச் செய்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : PM SVANidhi | தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்..!! கடன் தொகையை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு..!!