தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், தனித் தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி களத்தில் நிலவினாலும், கள யதார்த்தத்தில் அதிமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் அங்கு நேரடி அனல் பறக்கும் பலப்பரீட்சை உருவாகியுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் வென்ற சத்யபாமா ஆகியோர், அக்கட்சியின் உட்கட்சி மோதல் காரணமாகத் தங்களது எம்எல்ஏ பதவிகளைத் துச்சமெனத் துறந்து தவெகவில் ஐக்கியமாகினர். தற்போது அவர்கள் இருவருக்குமே மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட முதல்வர் விஜய் வாய்ப்பளித்துள்ளார். இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துத் துரோகத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும், இந்த இரு தொகுதிகளையும் தன்வசப்படுத்தித் தனது எம்எல்ஏ-க்களின் பலத்தை 107-லிருந்து 109 ஆக உயர்த்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தவெகவும் களத்தில் வரிந்துகட்டி நிற்கின்றன.
இருப்பினும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா மீது தொகுதி மக்களிடையே இயல்பாகவே கடும் அதிருப்தியும் சலசலப்பும் நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், தொகுதி மக்களின் அதிருப்தி அலையைத் தவிடுபொடியாக்கி வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தலா இரண்டு நாட்கள் வீதம் மொத்தம் நான்கு நாட்கள் நேரில் முகாமிட்டுச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த தேர்தலில் தவெகவின் 20 நட்சத்திரப் பேச்சாளர்கள் மட்டுமே களம் கண்ட நிலையில், இம்முறை தேர்தல் பணிகளை முடுக்கிவிட 40 நட்சத்திரப் பேச்சாளர்களை கொண்ட பிரம்மாண்ட படையை தவெக களமிறக்கியுள்ளது.
வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல்வர் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருச்சி, நாகை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்து தனித்து 107 இடங்களை அள்ளிய விஜய், இடைத்தேர்தலுக்காக ஒரு தொகுதிக்கு இரண்டு நாட்கள் ஒதுக்கி வட மற்றும் கொங்கு மண்டலத் தனித் தொகுதிகளில் நேரடியாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாகவும் ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. கடந்த ஆண்டு தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அந்த நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு சென்று அஞ்சலி செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தேர்தல் பிரச்சார தேதிகள் மற்றும் கரூர் பயணத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தலைமைச் செயலகம் அல்லது தவெக தலைமைத் தரப்பிலிருந்து இறுதி செய்யப்பட்டு வெளியாகவில்லை.
Read More : ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!



