வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை- தெற்கு கடலாரப் பகுதிகளுக்கு ஆந்திர அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு – வடமேற்கு திசையில், வடதமிழக – புதுவை – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும்.
இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, பாக் நீரிணை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கு கடலுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. திங்கட்கிழமை இரவு முதல் நேற்று வரையிலும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ராமேசுவரம், மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



