திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.
அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு சொந்தமான நிறுவனம் வாங்கிய நிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு இடத்தை சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 45 லட்சம் கன அடி மண் எடுக்கப்பட்டு, அரசுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டுக்காக ஏரிக்கரையில் அணுகுசாலை அமைக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகபும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
எ.வ.வேலு, எ.வ.குமரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேடாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜூன் 25ம் தேதி, கரூரில் சாலையே அமைக்காமல் அமைத்ததாகக் கூறி ரூ.3.2 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



