பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், வஞ்சனை, குற்றவியல் மிரட்டல், ஒரு குற்றத்திற்கான ஆதாரங்களை மறைப்பதற்கு காரணமாக அமைதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..
இந்த வழக்கு விசாரணை பெங்களூருவில் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவை குற்றவாளி என தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தண்டனையின் அளவு நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பிற்குப் பிறகு, ரேவண்ணா நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.
பிரஜ்வால் ரேவண்ணா மீதான வழக்கு என்ன?
ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் ரேவண்ணா தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 2021 ஆம் ஆண்டு கோவிட் ஊரடங்கின் போது முதன்முறை பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதால், இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் காட்டும் 2,900 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்கள் உட்பட ஆன்லைனில் பரப்பப்பட்டன.. இது கடந்த ஆண்டு ரேவண்ணா புகார் பதிவு செய்ய வழிவகுத்தது. இதன் விளைவாக, முன்னாள் எம்.பி. மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர் விமர்சனங்களை எதிர்கொண்டதால், 2024 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி இந்தியா திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் சிறையில் உள்ளார். வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த வழக்கில் தனக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவிக்குமாறு ரேவண்ணா மனு தாக்கல் செய்தார்.
ரேவண்ணாவின் வழக்கறிஞர், தனக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், தனது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காகவே அவை சுமத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். முதல் சம்பவம் 2021 இல் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டு ஏன் இவ்வளவு தாமதமாகப் புகாரளிக்கப்பட்டது என்றும் ரேவண்ணா கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வலுவான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் தடயவியல் பகுப்பாய்விற்குப் பிறகு உண்மையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழு வாதிட்டது.
ஏப்ரல் 3 ஆம் தேதி, நீதிமன்றம் பிரஜ்வாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரன் தான் இந்த பிரஜ்வால் என்பது குறிப்பிடத்தக்கது..