“மனசு இருந்தா காசு கொடுங்க… மாட்டுத்தாவணிக்கு ஆட்டோ ஃப்ரீ!” மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இப்படி அழைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
மதுரையில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதால் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஓட்டுநர்கள் கூறி வருகின்றனர். இதனால் தங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த ஒரு வாரமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது, போராட்டங்களில் ஈடுபடுவது எனத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், மதுரை கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணிகளைக் கவரும் வகையில் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாட்டுத்தாவணிக்குச் செல்லக் காத்திருந்த பயணிகளிடம், “மாட்டுத்தாவணி போகிறீர்களா? ஆட்டோ ஃப்ரீ… ஏறிக்கொள்ளுங்கள். மனசு இருந்தால் காசு கொடுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் எனக் கூறிய அவர், அரசு ஊழியர்களுக்கு மட்டும் இரட்டிப்புக் கட்டணம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் குவிந்து வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானப் பிரச்சினையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளதாகச் சிலர் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில், இந்தச் செயல் வெறும் வீம்பு என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் ஒருபுறம் பெண்களுக்குப் பயனளித்து வரும் நிலையில், மறுபுறம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் எழுப்பும் கோரிக்கைகளும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
Also Read: வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை? தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!



