தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் பல மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணம் செய்வதால் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரி பெற்றோர் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூரின் 4 வழித்தடங்களில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சிவசங்கரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சென்னையில் மட்டும் இயக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதாக அமைச்சர் சிவசக்கரன் தெரிவித்தார்.
இந்த சிறப்பு பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளை நோக்கி குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயங்கும். ஒவ்வொரு காலையிலும் பணிமனைகளில் இருந்து புறப்படும் பேருந்துகள், மாணவர்களுக்கான குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று, கல்வி நிறுவன வளாகங்களுக்குள் இறக்கிவிடும். மாலையில் அதே வழித்தடத்தில் மாணவர்களை ஏற்றி திரும்பிச் செல்லும். இதன் மூலம் மாணவர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்காமல், பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
Read more: நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக EX MLA; பரபரப்பு வீடியோ..



