திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் நகர் பகுதி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கவியரசன் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி உறுப்பினர் காளிதாஸ் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் காளிதாஸ் வெளியே வந்தார்.
அந்தச் சம்பவத்தின் பின்னர், கவியரசனின் நண்பர்கள் பழிவாங்க திட்டமிட்டிருந்தனர். நேற்று முன்தினம், காளிதாஸ் மற்றும் அதே பகுதியில் இருக்கும் நந்தகுமார் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மின்சாரம் தடைபட்டது. உடனடியாக 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களைச் சுற்றி, காளிதாஸ் தப்பியோடினார். ஆனால், கும்பல் தவறாக நந்தகுமாரை வெட்டி கொலை செய்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய இளையராஜா, துரை ராஜ், ஹரிஹரன், மணி தேவா, தோனி, சிற்றரசன் என 6 பேர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். இளையராஜா இந்த கொலையில் மூளையாக செயல்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் மின் தடை காரணமாக ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.