திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் டெத் விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், குற்றவாளிகளை போலீஸ் தாக்கும் அடுத்தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குள் ஒரு சிறுவன் காவலரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே சிறுவன் காவலரை புகழும் மற்றொரு வீடியோ தற்போது இணையத்தில் பரவியுள்ளது. முதல் வீடியோவில், போலீஸ்காரர் ஒருவர் சிறுவனின் தலைமுடியைப் பிடித்து, பிளாஸ்டிக் குழாய் போன்ற பொருளால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பே நடந்ததாக கூறப்படுகிறபோதிலும், தற்போது தான் வீடியோ வெளிவந்துள்ளது.
வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்கியவர் என கூறப்படும் ஹரி என்ற போலீஸ்காரர், மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அந்த சிறுவன், “இது ஒரு வருடம் பழையது… இப்போது நான் வேலைக்குச் செல்கிறேன். அவர் என்னை இரண்டு முறை காப்பாற்றியிருக்கிறார். என் அம்மா மட்டுமே இருந்தபோது அவர் எனக்கு உதவினார்…” என உணர்ச்சி மிகுந்துப் பேசுகிறார்.
இந்த வீடியோ வெளியாகிய நேரத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது அஜித் குமார் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருந்தது. அஜித்தின் உடலில் 44 காயங்கள், அவரது வாய், காதுகளில் மிளகாய் தூள் தடவப்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக “அரசே தனது குடிமகனைக் கொன்றுவிட்டது” என கடுமையாக விமர்சித்ததுடன், இந்தக் கொலை ஒரு “கொடூரமான செயல்” என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் தேவநாதன்பட்டியில், ஒரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர், குடிபோதையில் குழப்பம் செய்ததாக கைது செய்யப்பட்டு, தேவநாதன்பட்டி காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற வழக்கறிஞர் பாண்டியராஜன், “தமிழ்நாட்டில் காவல்துறையின் மிருகத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரம்” என்று கூறியுள்ளார்.
வீடியோ வைரலான நிலையில், காவல்துறையினர் தொன்றுதொட்டு இதே வேலையைத் தான் செய்துவருவதுபோல் தெரிகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல் இன்னும் எத்தனை வீடியோக்கள் வெளியாகும் என்று தெரியாத நிலையில், இனியாவது காவல்துறையினர் திருந்தி, சரியான முறையில் விசாரணையை நடத்துவார்களா என்று, இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Read more: சரத்குமாரின் 3BHK மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. நீங்க எந்த படத்துக்கு போறீங்க..?