தென்னிந்தியாவில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பது காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. திரை உலகில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற பல முன்னணி நடிகர்கள், அதே ஆதரவை அரசியலிலும் பெற முயன்று தனித்த கட்சிகளை தொடங்கியுள்ளனர். ஆனால், அந்த மக்கள் ஆதரவு தேர்தல் வெற்றியாக மாறியதா? என்ற கேள்விக்கான பதில் கலவையாகவே இருக்கிறது.
எம்.ஜி.ஆர்: அந்த வரிசையில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர். அவர் தொடங்கிய AIADMK கட்சி, 1977 தேர்தலில் 51,94,876 வாக்குகள் பெற்று 30.4% வாக்கு சதவீதத்துடன் 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. நடிகர் ஒருவரின் அரசியல் தொடக்கத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது இன்னும் கருதப்படுகிறது.
என். டி. ராமராவ்: அடுத்து ஆந்திர அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் என். டி. ராமராவ்.. அவர் தொடங்கிய தெலுங்கு தேச கட்சி 1985 தேர்தலில் 46.2% வாக்குகளைப் பெற்று 250 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி அதிரடி வெற்றி பெற்றது. இது தென்னிந்திய அரசியலில் நடிகரின் மிகப்பெரிய தாக்கமாக பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த்: தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006 தேர்தலில் 8.4% வாக்குகள் பெற்று 27 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாலும், வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
சிரஞ்சிவி: ஆந்திராவில் சிரஞ்சிவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சி, 2009 தேர்தலில் 16.3% வாக்குகள் பெற்று 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆரம்ப வெற்றி இருந்தாலும், பின்னர் கட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை.
பவன் கல்யாண்: நடிகர் பவன் கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சி, 2019 தேர்தலில் 5.5% வாக்குகள் பெற்று வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தொடர்ந்து அரசியலில் செயல்பட்டதன் மூலம் 2024க்குப் பிறகு கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
கமல்: தமிழகத்தில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 2021 தேர்தலில் 2.6% வாக்குகள் பெற்றாலும், எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. கோவை தொகுதியில் அவர் தோல்வியடைந்ததும் அந்த தேர்தலின் முக்கிய அம்சமாகும். இந்நிலையில், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.



