ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். மத்திய அரசு அலுவலகங்கள், வளாகங்களில் அனுமதியின்றி புகைப்படம், வீடியோ எடுத்தல், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



