ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும் பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20,000-க்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும். அதற்கான அறிக்கை, ஆவணத்தின் நகலை பாதுகாக்க வேண்டும்.
ஒருவேளை தகவல் தெரிவிக்காதது அல்லது காலம் தாழ்த்தியது தெரிந்தால், மாவட்ட பதிவாளர்கள் அதுகுறித்த அறிக்கையை மண்டல துணை பதிவாளர்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளர் பதிவுக்கு வரும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். பதிவு அலுவலர்கள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்கள் உரிய அறிவுறுத்தல்களை பதிவு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.