இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ககன்யான் மிஷன் திட்டத்தில் மிக முக்கியமான முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) முதல் ஒருங்கிணைந்த வான்வழித் துளி சோதனையை (IADT-01) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை, விண்வெளிப் பயணிகள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதிசெய்யும் பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பைச் சரிபார்ப்பதற்காக நடத்தப்பட்டது. IADT-01 என்பது ககன்யான் மிஷனுக்கான முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகும். இதில், கேப்சூல் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது அதன் வேகத்தை குறைத்து, கடலில் பாதுகாப்பாக இறங்குமா என்பதை மதிப்பீடு செய்தனர்.
பாராசூட் தொகுப்பில், இரண்டு ட்ரோக் பாராசூட்டுகள் (ஆரம்ப வேகக் குறைப்புக்கு), பைலட் சூட்கள், மூன்று முக்கிய பாராசூட்டுகள் (பாதுகாப்பான இறங்குதலுக்காக) இடம்பெற்றன. இஸ்ரோ கூறுகையில், இந்த சோதனை மனித விண்வெளிப் பயணத்தின் மறு நுழைவு (Re-entry) மற்றும் ஸ்பிளாஷ் டவுன் (கடலில் இறங்குதல்) நிலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முக்கிய அடித்தளம் ஆகும்.
இந்த சோதனை ஒரு கூட்டு முயற்சி ஆகும். இதில், இஸ்ரோ, இந்திய விமானப்படை (IAF), பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (DRDO), இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை அமைப்புகள் பங்கேற்றன. முதலில் இந்தச் சோதனை 2024 மே மாதம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால், பணிக்கு முன்பான சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டதால், தற்போது சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ககன்யான் திட்டத்தின் முக்கியத்துவம்: ககன்யான் மிஷனின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 400 கி.மீ குறைந்த பூமி சுற்றுப்பாதையில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வார்கள். பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவார்கள். முதலில் ஒரு ஆளில்லா சோதனைப் பயணம் நடத்தப்படும். அதில் வ்யோமித்ரா ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும். இந்த மிஷன் வெற்றிகரமாக நடந்தால், இந்தியா தனது சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் உலகின் சில நாடுகளில் ஒன்றாக மாறும்.
Read more: தினமும் ரூ.300 சேமித்தால் ரூ.17 லட்சம் சம்பாதிக்கலாம்.. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?