மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அப்படி கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் ரூ.30 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக ஆட்சியில் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சென்னையில் விற்பனையாகி வந்தாலும், அதற்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், பலரும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரிகளின் கீழ் கொண்டு வர வேண்டுமென்றால் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாநில அரசுகள் ஒத்துழைத்தால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். இதைப்புரிந்துகொள்வது கடினம் அல்ல. மாநிலங்கள் இதிலிருந்து வருவாய் பெறுகிறார்கள். வருமானம் வரும் ஒருவர் அதை ஏன் விட்டுவிட வேண்டும்? மது மற்றும் எரிசக்தி இரண்டும் வருவாய் ஈட்டும் விஷயங்கள். பணவீக்கம் மற்றும் பிற விஷயங்களை பற்றி கவலைப்படுவது மத்திய அரசு மட்டுமே.

பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில்தான் ஓராண்டில் குறைந்த அளவில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டுள்ளது. வட அமெரிக்காவில் எரிபொருள் விலை கடந்த ஓராண்டில் 43 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் 2 சதவீதம்தான் ஓராண்டில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகில் ஏதாவது பிரகாசமான பகுதி இருக்கிறது என்றால் அது இந்தியாதான். ஐ.எம்.எஃப். நமது அண்டைநாடுகளில் உள்ள சில நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை உள்ளது. அந்த நாடுகளில் விலை அதிகமாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் உட்புற பகுதிகளில் கூட பற்றாக்குறை கிடையாது. மார்ச் 2020ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை இருந்த விலை 56 அமெரிக்க டாலர். தற்போது 96 அமெரிக்க டாலர். மத்திய அரசு விலையை நிலையாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டே வருகிறது”. இவ்வாறு அவர் பேசினார்.