அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாள் சரண்டர் விடுப்பிற்கு பணம் பெறுவது தொடர்பாக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும். அதன்படி வருடத்திற்கு 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் நடைமுறை தொடரும். 2020 ஏப்ரல் 27 முதல் 2025 செப்டம்பர் 30 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சேர்ந்த காலாண்டை (Quarter) அடிப்படையாகக் கொண்டு 2025–26 ல் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேப்போல் 26.04.2020 அல்லது அதற்கு முன்பாக பணியில் சேர்ந்திருந்தும் இதுவரை ஒருமுறையும் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்யாத ஊழியர்களும், தங்கள் சேர்ந்த மாதத்தை பொறுத்து 2025–26 ல் முதல் முறையாக சரண்டர் செய்யலாம்.இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் /சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் பொருந்தும்.’ என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



