புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக அதற்கான பண மானியம் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை (CBDC) கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாகப் பயனாளிகளின் கைப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 1.6 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது எண்களைப் பதிவு செய்துள்ள நிலையில், முதற்கட்டமாக 1.02 லட்சம் பயனாளிகளுக்கு ஜூன் மாதத்திற்கான தானிய மானியம் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) முறையில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை கைப்பேசி எண்களை பதிவு செய்யாத எஞ்சிய அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் வாயிலாகத் தங்களது விவரங்களை உடனடியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவை முடிக்காதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



