தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் சார்ந்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களில் இருந்து ஓராண்டாக (365 நாட்கள்) உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) போன்ற மாநில முகமைகள் நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, UPSC, SSC, RRB, IBPS உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் போட்டித் தேர்வுகள் குறித்த பாடத்திட்டம், அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டல் தகவல்கள் இந்த “வெற்றிப் பாதை” செயலியில் முழுமையாக இடம்பெறும் என குறிப்பிட்டார்.
தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த முடியாத பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு இச்செயலி ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும், சரியான வழிகாட்டல் மூலம் அரசுப் பணிகளில் இளைஞர்கள் எளிதில் வெற்றிபெற இத்திட்டம் பெரும் உந்துசக்தியாகத் திகழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



