தமிழகம் முழுவதும் இன்று 12,525 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 12525 கிராமங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் கிராம சபை கூட்ட நடவடிக்கைகள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகள், அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளது.
கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் ஆகிய கூட்டப் பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும். அனைத்துத் துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொது மக்கள் நன்கு அறியும் வகையில் கூறிடவேண்டும்.
எனவே கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.