ஏழைகளுக்கு உதவுவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற தாய்லாந்தின் ராணி அன்னை சிரிகிட் காலமானார்.. அவருக்கு வயது 93. நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிகி பாங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை வரை மோசமடைந்தது, இரவு 9:21 மணிக்கு 93 வயதில் மருத்துவமனையில் காலமானார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் சிரிகிட் ஆவார். அவரின் உடல்நிலை அக்டோபர் 17 அன்று மோசமடைந்தது.. ரத்தத்தில் தொற்று ஏற்பட்டு அவர் அவதிப்பட்டு வந்தார், மேலும் அவருக்கு அரச இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்ய மன்னர் வஜிரலோங்கோர்ன் தாய் அரச குடும்ப பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்கு வரை, அவரது உடல் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸின் டுசிட் தோர்ன் ஹாலில் வைக்கப்படும் என்று அரண்மனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி தாய்லாந்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. பல்வேறு தரப்பினரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரை மணந்தார் சிரிகிட்
தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான மன்னர் பூமிபோல் அதுல்யதேஜை சிரிகிட் மணந்தார். அதுல்யதேஜ் 2016 இல் காலமானார். பிரான்சின் பாரிஸில், அதுல்யதேஜ் அந்நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டபோது இருவரும் சந்தித்தனர். இருவரும் ஏப்ரல் 1950 இல் திருமணம் செய்து கொண்டனர், அதே ஆண்டில் அதுல்யதேஜ் தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
இருவருக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தனர் – தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்ன், மற்றும் இளவரசிகள் உபோல்ரதானா, சிரிந்தோர்ன் மற்றும் சுலாபோர்ன்.
தங்கள் திருமணத்திற்குப் பிறகு, கிராமப்புற வறுமை, மலைவாழ் பழங்குடியினரிடையே அபின் போதை மற்றும் கம்யூனிச கிளர்ச்சி போன்ற தாய்லாந்தின் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தம்பதியினர் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்பது வழக்கம்.
சிரிகிட் 1979 இல் அளித்த பேட்டியில் “கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் பாங்காக்கில் உள்ள பணக்காரர்கள், நாகரிக மக்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் இடையே தவறான புரிதல்கள் எழுகின்றன. தாய்லாந்தின் கிராமப்புற மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள், மேலும் தொலைதூரப் பகுதிகளில் அவர்களுடன் தங்குவதன் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறோம்,” என்று கூறினார்..
மேலும் “பல்கலைக்கழகங்களில் முடியாட்சி காலாவதியானது என்று நினைக்கும் சிலர் உள்ளனர். ஆனால் தாய்லாந்திற்கு ஒரு புரிந்துகொள்ளும் மன்னர் தேவை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்திருந்தார். “‘ராஜா வருகிறார்’ என்ற அழைப்பின் பேரில், ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். ராஜா என்ற வார்த்தையில் ஏதோ மந்திரம் இருக்கிறது. அது அற்புதம்.” என்று கூறியிருந்தார்.



