பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி. 4-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து மீண்டும் ஜனவரி 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



