10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அப்போது, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.
11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, நாள் தொடர்பான விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியிலேயே செய்முறைத் தேர்வு வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read more: அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்!. இன்று உலக அகதிகள் தினம்!