அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த செங்கோட்டையன் ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் தேவர் ஜெயந்தி விழாவில் ஒரே மேடையில் பங்கேற்றது கட்சிக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனை கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கை எனக் குறிப்பிடும் வகையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்தார்.
இதைதொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவிலும் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்க மாட்டார்கள். சிலருக்கு ஈகோ பிரச்சனை கூட இருக்கும். அந்த வேளையில் திமுக இதைப் பயன்படுத்தி, தங்கள் ஆட்சியின் குறைகளை மறைக்கிறது,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் “ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்த போது செங்கோட்டையனே கைதூக்கி ஆதரவு அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக கொண்டு வர அனைவரும் பாடுபட்டோம். ஆனால் திடீரென செங்கோட்டையனுக்கு என்ன ஆனது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி எது சரியோ அதையே செய்கிறார். திமுகவை வீழ்த்தும் நோக்கம் இல்லாமல், தனிப்பட்ட நோக்கத்தை முன்னெடுத்ததால் அவர் நீக்கப்பட்டார்,” என்றார்.
தொடர்ந்து “எனக்கும் சில வருத்தங்கள் இருக்கின்றன, ஆனால் அதனை ஊடகத்திடம் சொல்லக் கூடாது. பொதுச் செயலாளரிடம் நேரடியாக பேசவேண்டும்,” என்று சூசகமாக தெரிவித்தார். அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவரான செங்கோட்டையன் நீக்கப்பட்டது கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



