தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..
இந்த சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியும் இதுவரை பாஜக வேட்பாளர் தேர்வில் சமூக முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது..
அண்ணாமலை கட்டாயம் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாம்.. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாம்.. ஆனால் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளாராம்.. வானதி சீனிவாசனும் அதே தொகுதியை கேட்பதால் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை அண்ணாமலையிடம் அறிவுறுத்தி உள்ளதாம்.
ஆனால் விரும்பிய தொகுதி கிடைக்காததால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்துள்ளாராம்.. எனினும் அவரின் ஆதரவாளர்களோ மொடக்குறிச்சி தொகுதியில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறி அண்ணாமலையை சமாதானம் செய்தார்களாம்..
ஆனால் 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் நின்ற போது திமுகவும், அதிமுகவும் பல கோடி செலவு செய்து என்னை தோற்கடித்தனர்.. எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அதையே தான் இப்போதும் செய்வார்கள். கட்சியில் பதவியில் இல்லாத நேரத்தில் தேர்தலில் தோற்றுவிட்டால் எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று தேர்தலில் போட்டியிடவே அண்ணாமலை விரும்பவில்லையாம்..
அதே நேரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மட்டுமே செய்வது எனவும் முடிவெடுத்துள்ளாராம். மேலும் இதுதொடர்பாக கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் பாஜக வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக பாஜகவில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாகஅண்ணாமலை புறக்கணிக்கப்படுவதால் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..



