கேரளாவில் நள்ளிரவில் நடந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.
குருவாயூர் பகுதியில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். இரவு சுமார் 11.40 மணியளவில் பனம்பிக்குன்னு பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அதே திசையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியது.
மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது. காருக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீவிரமாக செயல்பட்டனர். காரின் பாகங்களை வெட்டி அகற்றிய பின்னரே சிலரை வெளியே கொண்டுவர முடிந்தது.
விபத்தில் 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொரு மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய கார் தமிழக பதிவு எண்ணைக் கொண்டிருந்தது. மேலும், சம்பவ இடத்தில் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 8 பேரின் முழுமையான அடையாளங்களை உறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
சாலைப் பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததா அல்லது காரின் வேகம் உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கேரளாவில் மற்றொரு சாலை விபத்திலும் 24 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 4-ஆம் தேதி காலை எரமல்லூரில் இருந்து கலூர் நோக்கிச் சென்ற பேருந்து கும்பளம் சுங்கச்சாவடி தூண் மீது மோதியது. காலை சுமார் 8 மணியளவில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்த 24 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Also Read: மீண்டும் ஓர் அதிர்ச்சி! கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த வெள்ளம்.. 17,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!



